கர்நாடகத்தில் சிவப்பு மண்டலங்களை தவிர்த்து நாளை முதல் அரசு பஸ்கள் இயங்கும் - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி அறிவிப்பு
கர்நாடகத்தில் சிவப்பு மண்டலங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் நாளை முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்தார்.
பெலகாவி,
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மைசூரு, பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர் ஆகிய 3 மாவட்டங்கள், சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் 13 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 14 மாவட்டங்கள் பசுமை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிவப்பு மண்டலங்களை தவிர்த்து மற்ற மண்டலங்களில் தொழிற்சாலைகள், கடைகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில் தற்போது ஊரடங்கால் சிக்கி தவிக்கும் வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர்களை கர்நாடக அரசு பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெலகாவியில் போக்குவரத்து துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாளை முதல் அரசு பஸ்கள் இயங்கும்
அப்போது அவர் கூறியதாவது:-
சிவப்பு மண்டலம் அல்லாத பிற பகுதிகளில் மே 4-ந்தேதி (அதாவது நாளை) முதல் கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படும். கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்படாது. நகரம் முதல் கிராமங்கள் வரை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப கர்நாடக அரசு பஸ்களில் கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படுவதாக கூறுவது தவறான கருத்து. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு பஸ்சில் 30 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் உள்ளது.
இலவசமாக பஸ் இயக்குவது சாத்தியமில்லை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த பஸ் கட்டணம் தவிர்க்க முடியாதது. இந்த சிறிய சுமையை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக பஸ் இயக்குவது என்பது சாத்தியமில்லை.
ஏனெனில் கொரோனாவால் அனைத்து துறைகளும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே, இலவசமாக பஸ்களை இயக்குவது என்பது சாத்தியம் இல்லாதது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்த கட்டண சுமையை சுமப்பது தவிர்க்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.