முத்துப்பேட்டை அருகே 4 நாட்களாக மரத்தில் தங்கி இருந்த வாலிபர் போலீசார் மீட்டனர்

முத்துப்பேட்டை அருகே 4 நாட்களாக மரத்தில் தங்கி இருந்த வாலிபரை போலீசார் மீட்டனர்.

Update: 2020-05-02 23:43 GMT
முத்துப்பேட்டை, 

முத்துப்பேட்டை அருகே 4 நாட்களாக மரத்தில் தங்கி இருந்த வாலிபரை போலீசார் மீட்டனர்.

மரத்தில் வாலிபர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள குன்னலூர் மேலபெருமழை சாலையோரத்தில் 30 அடி உயரம் கொண்ட கருவேல மரத்தின் உச்சியில் கடந்த 4 நாட்களாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தங்கி இருந்தார். அவரிடம் கிராம மக்கள் கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் இறங்கி வர மறுத்து விட்டார். இதுறித்து தகவல் அறிந்த எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மற்றும் போலீசார் பரத், பாஸ்கர் ஆகியோர் நேற்று அங்கு சென்று மரத்தின் உச்சியில் தங்கி இருந்த நபரிடம் பேச்சுக்கொடுத்தனர்.

மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

பல மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த வாலிபரை போலீசார் மரத்தில் இருந்து கீழே இறங்கி வர செய்தனர். பின்னர் அவரை அங்கு உள்ள குளத்தில் குளிக்க வைத்து புது ஆடைகளை அணிய வைத்து உணவு வழங்கினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். ஊர், பெயர் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 4 நாட்களாக சாப்பிடாததால் பலவீனமாக இருந்த அவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்