வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் விளை பொருட்களை இருப்பு வைக்க கட்டணம் கிடையாது

நாகை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிடங்குகளில் விளை பொருட்களை இருப்பு வைக்க வருகிற 30-ந் தேதி வரை கட்டணம் கிடையாது என கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.

Update: 2020-05-02 23:11 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிடங்குகளில் விளை பொருட்களை இருப்பு வைக்க வருகிற 30-ந் தேதி வரை கட்டணம் கிடையாது என கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்

நாகை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதாரண்யம், திருப்பூண்டி, நாகை, கீழ்வேளூர் ஆகிய 8 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 15 ஆயிரத்து 120 டன் விளைபொருட்கள் இருப்பு வைக்கும் அளவிற்கு 20 கிடங்குகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைக்க வருகிற 30-ந் தேதி வரை கட்டணம் கிடையாது. கட்டணமின்றி அதிகபட்சமாக 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

பொருளட்டுக்கடன்

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் இருப்பு வைக்கும் விளைபொருளுக்கு பொருளட்டுகடனாக ரூ.3 லட்சம் வரை வருகிற 30-ந் தேதி வரை வட்டியின்றி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விவசாயிகள் பொருளட்டுக்கடன் பெற்று பயன் அடையலாம்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கு 1 சதவீத சந்தை கட்டணமும் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த கட்டண விலக்கை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்