சொந்த ஊர் திரும்ப விரும்பும் வெளிமாநிலத்தினர் போலீஸ் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் - மராட்டிய அரசு அறிவிப்பு

சொந்த ஊர் திரும்ப விரும்பும் வெளிமாநிலத்தினர் போலீஸ் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என மராட்டிய அரசு தெரிவித்து உள்ளது.;

Update: 2020-05-02 23:10 GMT
மும்பை, 

கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் வெளிமாநிலத்தினர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. இந்தநிலையில், மராட்டிய அரசு நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மராட்டியத்தின் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ள மாநகரங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மராட்டிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் தேவையான தகவல்களையும், மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

துணை கமிஷனர் முடிவு எடுப்பார்

இருப்பினும் மும்பை பெருநகரம் மற்றும் புனே பெருநகர பகுதியில் வசிக்கும் மராட்டியத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தாது. அதே நேரத்தில் மும்பை, புனேயில் வசிக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பிக்கலாம்.

போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட துணை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்படும்.

அந்த விண்ணப்பங்கள் மீது கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அவர் முடிவு எடுப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்