தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வினியோகம்
தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 6½ லட்சம் குடும்பங்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 6½ லட்சம் குடும்பங்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி தொடங்கி தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
ஊரடங்கினால் தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களின் வாழ்வாதாரத்துக்காக அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
டோக்கன் வினியோகம்
மேலும் மே மாதத்துக்கும் இலவசமாக அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனை பெறுவதற்காக ரேஷன் கடையில் மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வீடு தேடி வந்து டோக்கன் வழங்கப்படும். அதன்படி 4-ந்தேதி முதல் தினமும் 150 பேர் வீதம் ரேஷன்கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுச்செல்லும் வகையில் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. ரேஷன்கடை பணியாளர்கள் டோக்கனில் குடும்ப அட்டை எண் மற்றும் பெயர், அவர்கள் வந்து வாங்க வேண்டிய தேதி ஆகியவற்றை அதில் குறிப்பிட்டு எழுதிக்கொடுத்தனர். இந்த நிலையில் பல ரேஷன்கடைகளுக்கு காலையிலேயே பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்களை அலைக்கழிக்க விடாமல் அங்கேயே ஊழியர்கள் டோக்கன்களை வழங்கினர்.
6½ லட்சம் குடும்ப அட்டை
தஞ்சை மாவட்டத்தில் 6½ லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் உள்ள ரேஷன்கடையில் பொதுமக்களுக்கு வட்ட வழங்கல் அதிகாரி மரியஜோசப் டோக்கன் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு இன்று (நேற்று) முதல் 2 நாட்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படும். யாருக்கும் விடுபடாமல் வீடு தேடிச்சென்று வழங்கப்படும். தஞ்சை தாலுகாவில் மட்டும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 240 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாளில் சம்பந்தப்பட்ட அட்டைதாரர்கள் கடைக்கு வந்து பொருட்களை பெற்றுச்செல்லலாம்”என்றார்.