கோவை மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கோவை மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்து உள்ளார்.

Update: 2020-05-02 22:37 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத், பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா வைரசை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மாலையில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த வைரசில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாகவும், உயிரிழப்பு குறைவாகவும் உள்ளது.

மாலை 5 மணி வரை

தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டத்தில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்த தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தொற்று பரவாத வகையில், கோவை மாவட்டத்துக்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தி கண்காணித்திட வேண்டிய நிலை இருக்கிறது. அதன்படி மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கையில் முத்திரை

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே கேரள மாநில எல்லைகளில் 14 பகுதிகளில் வாகனக்கட்டுப்பாடு தீவிரமாக இருப்பதுபோன்று, மாவட்ட எல்லைகளான ஓடந்துறை, சின்னக்கள்ளிப்பட்டி, செல்லப்பம்பாளையம், ஆம்போதி, கஞ்சப்பள்ளி, கருமத்தம்பட்டி, தெக்கலூர், காங்கயம்பாளையம், கோமங்கலம், காமநாயக்கன்பாளையம், ரெட்டியார்மடம் ஆகிய 11 பகுதிகளிலும் வாகனத்தணிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அத்தியாவசிய வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களில் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் கையில் முத்திரை பதிக்க வேண்டும். போலீசாரால் வாகன தணிக்கை நடைபெறும் பகுதிகளில் சுகாதாரப்பணிகள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

தனிமைப்படுத்தி கண்காணிப்பு

வெளியூர்களில் இருந்து வரும் நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவ்வாறு கண்காணிக்கப்படும் நபர்கள் எக்காரணத்தைக்கொண்டும் வெளியே செல்லக்கூடாது. கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்படும் நிலையில் அவர்களை மாவட்டத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மாறாக தனியார் கண்காணிப்பு மையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே அவர்கள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

காரணம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்று அறிகுறியுடன் மாவட்டத்துக்குள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காமல் இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு ஒத்துழைப்பு

கோவை மாவட்டம் ஏற்கனவே சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், முழு அளவில் கொரோனா தொற்று இல்லை என்ற நிலை வந்து பச்சை மண்டலத்துக்கு செல்ல பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) காளிதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ரமேஷ்குமார், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா, துணை இயக்குனர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்