ஊரடங்கில் பொழுதுபோக்கு: சமூக விரோதிகளின் புகலிடமான அரசரடி குடிநீரேற்று நிலையம்

மதுரை நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் அரசரடி நீரேற்று நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது.

Update: 2020-05-02 22:30 GMT
மதுரை,

வைகை அணையில் இருந்து மதுரை நகரின் குடிநீர் வினியோகத்திற்காக பெறப்படும் தண்ணீர் அரசரடியில் உள்ள தரைத்தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தொட்டியில் தேக்கி வைக்கப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு சுமார் 17 லட்சம் லிட்டராகும். இங்கிருந்து தான் மதுரை நகரின் மற்ற இடங்களில் உள்ள உயர்மட்ட தொட்டிகளுக்கு தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.

இந்த நீரேற்று நிலையம் அமைந்துள்ள இடத்தின் மொத்த பரப்பளவு 7 ஏக்கர் வரை ஆகும். இதில் சுமார் 5 ஏக்கர் அளவில் குடிநீர் மோட்டார் பம்பிங் செய்யும் நிலையம், அலுவலகம், மின்சார வினியோக கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 ஏக்கர் அளவுள்ள இடம் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. இந்த இடத்தில் பல்வேறு தாவரங்களும், மரங்களும் வளர்ந்து புதராக காணப்படுகிறது.

புதர் போன்ற இந்த இடத்தை சமூக விரோதிகள் மது அருந்துவது, சீட்டாட்டம், கஞ்சா புகைப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக இந்த பகுதியில் உள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சமூக விரோதிகள் சுவர் ஏறி குதித்து குடிநீர் வாரிய அலுவலக பகுதிக்குள் நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்களுக்காக இங்கு பொதுக்கழிப்பறையும், குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டது. இவற்றை சமூக விரோதிகள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இங்குள்ள ஊழியர்கள் கேட்ட நிலையில், அவர்களுக்கு இந்த சமூக விரோதிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதனால், இந்த பிரச்சினையை தடுக்கும் விதமாக ஊழியர்களுக்கான கழிப்பறையும், தண்ணீர் குழாயும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் என்பது உயிராதார பிரச்சினை ஆகும். எனவே, இந்த சமூக விரோதிகள் போதையில் இந்த குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தி விடாமல் தடுத்து பாதுகாக்க மாநகராட்சி இந்த குடிநீரேற்று நிலையத்தில் சரியான பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதுடன், கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்