தேங்கி நின்ற கழிவுநீரில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அருகே தேங்கி நின்ற கழிவுநீரில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-02 22:11 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் நீண்டநாட்களாக அங்குள்ள கழிவுநீர் கால்வாயை அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி வீதிகளில் குட்டை போல் தேங்கி நின்றது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.

இதனால் தனிநபர் அடைத்து வைத்துள்ள கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் கால்வாயை சரிசெய்தனர்.

போராட்டம்

இருப்பினும் அந்த தனிநபர் மீண்டும் கால்வாயை அடைத்தார். இதனால் கழிவுநீர் மீண்டும் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தேங்கி நின்ற கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்