ஓய்வு பெறும் நாளில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பணியிடை நீக்கம்
பணி ஓய்வு பெறும் நாளில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்க நெல்லையில் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மண்டல இயக்குனராக காளிமுத்து பணியாற்றி வந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இவர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இவர் கடலூரில் நகராட்சி ஆணையராக பணியாற்றியபோது இவர் மீது பெறப்பட்ட புகார் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை இன்னும் முடிவு பெறாத நிலையில் மண்டல இயக்குனர் காளிமுத்து கடந்த மாதம் 30-ந்தேதி பணி ஓய்வு பெற இருந்தார்.
இந்த நிலையில் விசாரணை முடிவு பெற வசதியாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மண்டல இயக்குனர் காளிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் அயூப்கானும் இதே காரணங்களுக்காக ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பணி ஓய்வு பெறும் நாளில் அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் 5 வருடங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விசாரணையை குறித்த காலத்தில் முடிக்காமல் பணி ஓய்வு பெறும் நாளில் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதோடு, தமிழக அரசு இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.