ஆத்தூர் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு 3 வயது குழந்தை சாவு
ஆத்தூர் அருகே தண்ட வாளத்தில் விழுந்த பந்தை எடுக்க சென்றபோது, ரெயில் என்ஜினில் அடிபட்டு 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே தண்ட வாளத்தில் விழுந்த பந்தை எடுக்க சென்றபோது, ரெயில் என்ஜினில் அடிபட்டு 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மீனா. இவர்களது 3 வயது குழந்தை நதியா. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சக்தி நகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே அக்கம்பக்கத்தில் வசிக்கும் மற்ற குழந்தைகளுடன் நதியா பந்து விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி தண்டவாளங்களை ஆய்வு செய்வதற்காக ரெயில் என்ஜின் சென்றுக்கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் இயக்கப்படாததால் சோதனைக்காக என்ஜின் மட்டும் சென்றது.
இதனிடையே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த பந்து, ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது. அந்த பந்தை எடுக்க நதியா சென்றாள். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் நதியா மீது மோதியதில் அவள் படுகாயம் அடைந்தாள்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நதியாவை, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயிலில் அடிபட்டு குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.