சோதனைச்சாவடிகளை கடக்கும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: கலெக்டர் மெகராஜ் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளை கடக்கும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லை பகுதிகளில் 14 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனைச்சாவடிகளில் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளையொட்டி மாவட்டத்தினை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த சோதனைச்சாவடிகளில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனங்களின் விவரங்கள், டிரைவர்கள், உரிமையாளர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து சோதனைச்சாவடிகளிலும் டிரைவர்களின் உடல் வெப்பநிலையை ‘தெர்மல் ஸ்கேனர்’ எந்திரம் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களுக்கான நகர்விற்கு அரசினால் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளே வரும்போது வாகனங்களில் வரும் நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்து, பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
சோதனைச்சாவடிகளில்் சோதனை செய்யும் போது, கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் கண்டறியப்படும் நபர்களை உடனே அருகில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டுகளுக்கு சிகிச்சைக்காக அவசர சேவை ஊர்தி மூலம் அழைத்து செல்ல வேண்டும். சோதனைச்சாவடியை கடக்கும் அவசர சேவை ஊர்தி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் இருந்தால், அவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தி கண்காணித்திட வேண்டும்.
இந்த சோதனைச்சாவடி பணிகள் சரியான முறையில் நடைபெறுகின்றனவா? என்று வட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள துணை கலெக்டர்கள் கண்காணித்திட வேண்டும். இந்த பணிகளை சரியாக மேற்கொண்டு கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தினை உருவாக்்்்்்்க அனைவரும் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- திம்மநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் சென்னையில் இருந்து வந்த 12 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அருகில் உள்ள முகாமில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 50 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 11 பேர் சேலம், கரூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இன்னும் 5 நாட்களில் குணமாகி வீடு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதுவரை புதிய தொற்று ஏதுவும் ஏற்படாமல் இருந்தால் நமது மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும். நமது மாவட்டம் தற்போது சிவப்பு மண்டலமாக இருப்பதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும். அரசு அறிவித்து உள்ள தளர்வுகள் மட்டுமே இருக்கும் என்று அவர் கூறினார்.