ஊரடங்கால் வருமானம் இல்லை: சுற்றுலா வேன் டிரைவர்கள் தவிப்பு
ஊரடங்கால் சுற்றுலா வேன் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் சுற்றுலா வேன் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
சுற்றுலா வேன்கள்
கொரோனா வைரசால் உலகமே முடங்கி போய் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
போக்குவரத்து தடைபட்டு சுற்றுலா வேன்கள் ஓடாததால் அதன் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை அருகே சுற்றுலா வேன்கள் நிறுத்துமிடம் உள்ளது. இதில் ஏராளமான சுற்றுலா வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் வேன்கள் நிறுத்துமிடத்தில் பலர் வண்டியை நிறுத்தி விட்டனர். சிலர் தங்களது வீடுகளின் முன்பு நிறுத்தி உள்ளனர்.
நிவாரண உதவி தேவை
தொடர்ந்து வேன்கள் இயக்கப்படாததால் டயர்களில் காற்று இறங்கி பஞ்சர் ஆகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேன்களின் டயர்களின் அருகே கற்களை அடுக்கி வைத்து ஜாக்கி போல நிறுத்தி உள்ளனர். வேன்கள் ஓடாததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அதன் டிரைவர்கள் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அரசு கொடுத்த நிவாரண நிதி நல வாரிய உறுப்பினர்களுக்கு மட்டும் சென்றது. நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வேன்கள் முற்றிலும் ஓடாததால் எங்களது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது. மேலும் ஒரே இடத்தில் வேனை நிறுத்தி வைத்திருப்பதால் கண்ணாடி மீது வெயில் படுவதால் சேதமடைந்து வருகிறது. வேன்களின் டயர்களுக்கு காற்றடிக்க கூட ஓட்டிச்செல்ல முடியவில்லை. எங்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.