சமூக இடைவெளியுடன் பயணிகள் பயன்பாட்டிற்கு திருச்சி விமான நிலையம் தயார் இயக்குனர் தகவல்
சமூக இடைவெளியுடன் விமான பயணிகள் பயன்பாட்டிற்கு திருச்சி விமான நிலையம் தயாராக இருப்பதாக அதன் இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
செம்பட்டு,
சமூக இடைவெளியுடன் விமான பயணிகள் பயன்பாட்டிற்கு திருச்சி விமான நிலையம் தயாராக இருப்பதாக அதன் இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
விமான போக்குவரத்து
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதிக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படாத நிலையில் திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வரும் வேளையில் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க இருக்கிறது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு குறித்து விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
தயார் நிலை
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படுவதற்கு தயார் நிலையில் திருச்சி விமான நிலையம் உள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளியில் பயணிகள் அமர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணிக்க இருப்பவர்கள் விமான நிலையத்தின் நுழைவுவாயிலை அடைந்தபிறகு முதலாவதாக அவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இரண்டாவது நிலைக்கு அனுப்பப்படுவர்.
பரிசோதனைக்கு பிறகே அனுமதி
அடுத்த கட்டமாக குடியுரிமை பிரிவிற்கு செல்வதற்குமுன் பயணிகளுக்கு இரு கைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முக கவசங்கள் அணிந்து உள்ளார்களா என்பது உறுதி செய்யப் படும். பின்னர் அங்கும் அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படும். அதன்பிறகு அவர்களுக்கு எந்தவிதமான தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் பயணிகளின் உடைமைகளை கையாளுவதற்காக தனியாக ஆட்கள் அமர்த்தப்படுவர். பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை கன்வேயர் மூலம் விமானத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு பயணிகளுக்கு ஒப்படைக்கும் பணியை அவர்கள் செய்வார்கள். விமானத்தில் பயணம் செய்து திருச்சி விமான நிலையத்திற்குள் வரும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிய உடன் அவர்களுக்கு தொற்று குறித்த சோதனை நடத்தப்படும்.
மருத்துவக்குழு
இத்தருணத்தில் பயணிகள் யாரும் கன்வேயர் அருகில் அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு பரிசோதனை செய்யப்படும் நபர்களுக்கு ஏதேனும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ குழுவினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகளை பரிசோதனை செய்வதற்காக மூன்று விமான நிலைய மருத்துவர்களும் அவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு அரசு மருத்துவர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமான நிறுவனத்தினர் விமான பயன்பாட்டாளர்கள் குழுவினர் மற்றும் பாதுகாப்பு குழுவினருடன் கூட்டம் நடத்தப்பட்டு அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விமான நிலைய ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளது. விமானம் இயக்கப்படுவது குறித்து விமான நிலைய ஆணையமும் மத்திய அரசு எடுக்கும். அதன்படி திருச்சி விமான நிலையம் பயணிகள் சேவைக்காக எப்போதும் தயாராக இருக்கிறது. விமானங்கள் இயக்கவிருக்கும் நாட்கள், அவற்றிற்கான நேரம், கட்டண விவரம் ஆகியவற்றை விமான நிலைய ஆணைய குழு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து நிர்ணயம் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.