சிகிச்சை பெற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்: கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தேனி மாறியது

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பினர். இதனால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தேனி மாறியது.

Update: 2020-05-02 00:15 GMT
ஆண்டிப்பட்டி,

உலகையே அச்சுறுத்தி உள்ள கொரோனா வைரஸ் தேனி மாவட்டத்தையும் கடந்த மாதம் அதிர வைத்தது. மாவட்டத்தில் 43 பேர் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 23 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பி வந்தவர்கள். மற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது. இதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியபடி இருந்தனர். நேற்று முன்தினம் வரை 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அனைவரும் வீடு திரும்பினர்

8 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களும் நேற்று குணமடைந்தனர். அவர்கள் 5 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு தற்போது இல்லை என்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் தேனி அல்லிநகரம் மற்றும் போடி பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களை கல்லூரி முதல்வர் இளங்கோவன், துணை முதல்வர் எழிலரசன், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமரன், துணை நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன் மற்றும் மருத்துவ குழுவினர், மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து வழியனுப்பி வைத்தனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு பூக்கள், பழங்கள், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா இல்லை

இதையடுத்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தேனி மாறி உள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை சமூக பரவல் கண்டறியப்படவில்லை. கடந்த மாதம் 17-ந் தேதிக்கு பின்னர் மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங் கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் தேனி மாவட்டம் சிவப்பு மண்டலமாக இருந்தது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிப்பு குறைந்ததால், நேற்று காலையில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டது. இவ்வாறு மாற்றப்பட்ட பின்னரே, சிகிச்சையில் இருந்த 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், அடுத்த சில நாட்களிலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படாவிட்டால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக தேனி மாவட்டம் மாற வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்