எம்.எல்.சி. தேர்தல் தேதி அறிவிப்பு: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்து நீங்குகிறது
மராட்டியத்தில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட இருப்பதால் உத்தவ் தாக்கரேயின் முதல்-மந்திரி பதவிக்கு ஆபத்து நீங்குகிறது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை தொடர்ந்து நீண்ட கால நட்பு கட்சியான பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துகொண்ட சிவசேனா பரம எதிரி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து நவம்பர் 28-ந் தேதி கூட்டணி ஆட்சி அமைத்தது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ இல்லாத உத்தவ் தாக்கரே அரசியலமைப்பு விதியின்படி 6 மாதத்திற்குள், அதாவது வருகிற 27-ந் தேதிக்குள் ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும் என்பதால் கடந்த 24-ந் தேதி காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு நடக்க இருந்த தேர்தல் மூலம் தேர்வாக திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
பிரதமரிடம் பேச்சு
இதையடுத்து கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் எம்.எல்.சி. பதவியில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரி மாநில மந்திரிசபை 2 முறை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் பரிந்துரை மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியதால், கொரோனாவுக்கு எதிராக மாநிலத்தை காப்பாற்ற போராடி வரும் உத்தவ் தாக்கரே தனது பதவிக்காகவும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினையில் தலையிடும் படி கேட்டுக்கொண்டார்.
ஆபத்து நீங்குகிறது
இதையடுத்து 9 எம்.எல்.சி.க்களுக்கான தேர்தலை நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதினார். அதனை ஏற்று காலியாக உள்ள எம்.எல்.சி. பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
இதனால் அந்த தேர்தலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே போட்டியிட்டு தனது பதவியை தக்க வைத்து கொள்ள வழி கிடைத்து உள்ளது. இதன் மூலம் அவரது பதவிக்கு நீடித்து வந்த ஆபத்து நீங்குகிறது.
இதற்கிடையே நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அப்போது இருவரும் 60-வது மராட்டிய தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.