சோதனை சாவடிகளில் கண்காணிப்பில் ஈடுபடுபவர்கள் சென்னையில் இருந்து வருபவர்களின் தகவல்களை முழுமையாக பெற வேண்டும்

சென்னையில் இருந்து வருபவர்களின் தகவல்களை முழுமையாக பெற வேண்டும் என்று கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2020-05-01 23:19 GMT
தஞ்சாவூர்,

சென்னையில் இருந்து வருபவர்களின் தகவல்களை முழுமையாக பெற வேண்டும் என்று கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இதில் சிறப்பு ஐ.ஜி.சாரங்கன், கலெக்டர் கோவிந்தராவ், டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்த தொழிலாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவு வந்த பிறகு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் வெளிமாநில தொழிலாளர்களை முழு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுப்ப வேண்டும். தற்போது, சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வருபவர்களின் முழு விவரங்களை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் பெற வேண்டும். அவர்களை மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். மேலும், அவர்கள் தங்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். குழுக்களாக வரும்பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

நோட்டீசு ஒட்ட வேண்டும்

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களின் வீட்டின் முன்புறம் நோட்டீசு ஒட்டியது போல், சென்னையிலிருந்து வந்துள்ளவர்களின் வீட்டின் முன்புறம் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்களின் விவரங்களை சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் வீடுகளின் அருகாமையில் யாரேனும் சென்னையிலிருந்து வந்திருந்து அவர்களின் வீட்டின் முன்புறம் நோட்டீசு ஒட்டப்படாமல் இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மீனாட்சி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சண்முகம் பேட்டி

முன்னதாக சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் நாற்றுப்பறிப்பு, களைஎடுப்பு, நடவு செய்வது உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. மறுபுறம் ஊரடங்கு காரணமாக பஸ் வசதி இல்லாததால், தொழிலாளர்கள் வேலைக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், வருகிற மாதங்களில் சாப்பாடு தேவையும் இருப்பதால், தேவைப்படும் இடங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டும்.

எனவே, ஊரக வேலைவாய்ப்பு என்ற கருத்தை முன் வைத்து, யாரெல்லாம் வேலைக்கு செல்ல தயாராக இருக்கின்றனரோ, அவர்கள் ஊராட்சி செயலரிடம் மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், அனைத்து ஊராட்சிகளிலிருந்து பட்டியல் கிடைத்துவிடும். எங்கெங்கு தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்ற விவரமும் தெரிய வரும். எனவே ஆட்கள் தேவைப் படும் இடங்களுக்கு எந்த ஊராட்சியில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

வாகன வசதி

வேலை செய்ய விரும்பும் தொழிலாளர்களை ஒரு ஊராட்சியிலிருந்து மற்றொரு ஊராட்சிக்கு செல்ல அனுமதிப்போம். அதிக தொலைவில் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மினி வேன் அல்லது மினிபஸ் ஏற்பாடு செய்து தரப்படும். கட்டணமில்லாமல் அவர்கள் அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அழைத்து வரப்படுவர். இதன் மூலம், விவசாய பணி தொடர்ந்து நடைபெறும். விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கிராமங்களில் மீண்டும் பணப்புழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்