விவசாயிகள் எந்தவித கட்டணமும் இன்றி குளிர்பதன கிடங்கில் விளைபொருட்களை இருப்பு வைத்து சந்தைப்படுத்தலாம்
விவசாயிகள் எந்தவித கட்டணமும் இன்றி குளிர்பதன கிடங்கில் விளைபொருட்களை இருப்பு வைத்து சந்தைப்படுத்தலாம் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,
விவசாயிகள் எந்தவித கட்டணமும் இன்றி குளிர்பதன கிடங்கில் விளைபொருட்களை இருப்பு வைத்து சந்தைப்படுத்தலாம் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குளிர்பதன கிடங்கு
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குளிர்பதன கிடங்கு மற்றும் திருவையாறு மன்னார்சமுத்திரத்தில் அமைந்துள்ள 100 டன் குளிர்பதன கிடங்கினை விவசாயிகள் கட்டணம் இன்றி பயன்படுத்தலாம் என கலெக்டர் கோவிந்தராவ் கூறினார். இதையடுத்து குளிர்பதன கிடங்கினை ஆய்வு செய்த கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவை கட்டுப் படுத்திடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, விவசாயிகள் எவ்வித தடையுமின்றி தங்களின் விளைபொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைத்துக்கொள்வதற்கும்,சந்தைப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டணமின்றி பயன்படுத்தலாம்
அதன்படி தஞ்சை, பூதலூர், திருவையாறு, பாபநாசம் மற்றும் கும்பகோணம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள 25 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கிலும், திருவையாறு வளப்பக்குடிக்கு அருகிலுள்ள மன்னார்சமுத்திரத்தில் அமைந்துள்ள 100 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கிலும் அடுத்த மாதம் (மே) 31-ந்தேதி வரை எவ்வித கட்டணமுமின்றி தற்காலிகமாக விளைபொருட்களை இருப்பு வைத்து சந்தைப்படுத்தலாம். எனவே, தஞ்சை, பூதலூர், திருவையாறு, பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 8056999347, 8248589481 ஆகிய எண்களில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்களையும், 9842184435(பூதலூர்), 9940843213(திருவையாறு), 9655577082 (கும்பகோணம்) ஆகிய எண்களில் தோட்டக்கலை துறை அலுவலர்களையும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.