சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 980 டன் யூரியா தஞ்சை வந்தது மத்திய பிரதேசத்தில் இருந்து 2,600 டன் கோதுமையும் வந்தது

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 980 டன் யூரியா உரம் தஞ்சைக்கு நேற்று வந்தது. இதேபோல் மத்திய பிரதேசத்தில் இருந்து 2,600 டன் கோதுமையும் தஞ்சை வந்தது.;

Update: 2020-05-01 23:15 GMT
தஞ்சாவூர்,

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 980 டன் யூரியா உரம் தஞ்சைக்கு நேற்று வந்தது. இதேபோல் மத்திய பிரதேசத்தில் இருந்து 2,600 டன் கோதுமையும் தஞ்சை வந்தது.

யூரியா உரம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். அதன்படி தற்போது 20 ஆயிரம் எக்டேரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. மேலும் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு தேவையான உரங்களும் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் இருந்து சரக்கு ரெயிலின் 16 வேகன்களில் 980 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது. தஞ்சையில் இருந்து இந்த உரங்கள் லாரிகள் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மத்திய தொகுப்பு

மத்திய தொகுப்பில் இருந்து பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதேப்போல தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி, கோதுமை மூட்டைகள் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக்கிடங்கிலும், தமிழக அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிலும் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

2,600 டன் கோதுமை

இந்த நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் 2,600 டன் கோதுமை தஞ்சைக்கு வந்தது. இந்த கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்