ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - மாவட்ட கலெக்டர் வழங்கினார்
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகளில் தங்கி பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவன் தாங்கள் கிராமம் மற்றும் காஞ்சீபுரம் வட்டம் ஆட்டுப்புத்தூர் கிராமத்தில் தங்கி தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியபோது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், தமிழகத்தில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, மாவட்டத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் காஞ்சீபுரம் வட்டங்களில் குறைந்த அளவிலேயே உள்ளனர். அதிக அளவிலான வடமாநிலத் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இடங்களில் உள்ளனர்.
நிவாரண உதவிகள்
இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 34,883 நபர்கள் உள்ளனர். அவர்களில் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக 17,893 நபர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ சமையல் எண்ணெய், 1 கிலோ துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அரசு நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட் டுள்ளது.
மீதமுள்ள 16,990 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவை என மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கள் கிராமத்தில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் செ.சரவணன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல முதுநிலை மேலாளர் வி.செந்தில்குமார், ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.திவ்யஸ்ரீ, தாசில்தார் ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.