ஊரடங்கு உத்தரவு நாளில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 326 மது பாட்டில்கள் பறிமுதல்
ஊரடங்கு உத்தரவு நாளில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 326 மது பாட்டில்கள் பறிமுதல்
பெரம்பலூர்,
ஊரடங்கு உத்தரவு நாளில் இருந்து இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் மொத்தம் 14 ஆயிரத்து 326 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரோந்து பணியில் போலீசார்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவினால் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள், சாராயம், கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? சாராயம் தயாரிக்க ஊறல் போடப்படுகிறதா? என்று போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 ஆயிரத்து 508 லிட்டர் சாராய ஊறல்
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று வரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக பதுக்கி மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 138 வழக்குகளும், சாராயம் விற்பனை செய்ததாக 30 வழக்குகளும், சாராயம் தயாரிப்பதற்கு ஊறல் போட்டதாக 27 வழக்குகளும், கள் விற்றதாக 4 வழக்குகளும் என மொத்தம் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 326 மது பாட்டில்களும், 200 லிட்டர் சாராயமும், 2 ஆயிரத்து 508 லிட்டர் சாராய ஊறலும், 100 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மது பாட்டில்கள், சாராயம், கள் ஆகியவை விற்றதாகவும், சாராயம் தயாரிக்க ஊறல் போட்டதாகவும் என மொத்தம் 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.