பெரம்பலூர் அருகே பயங்கரம்: தாய்-தந்தை சரமாரி வெட்டிக் கொலை மகன் வெறிச்செயல்

பெரம்பலூர் அருகே தாய்-தந்தையை மகனே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-01 05:42 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே தாய்-தந்தையை மகனே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த இரட்டை கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பட்டதாரி வாலிபர்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பள்ளர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 62). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள் (55). இவர்களுக்கு ரவிச்சந்திரன், ரமேஷ் (35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். பட்டதாரியான ரமேஷ் கூலி வேலை செய்து வந்தார். மேலும் அவர் கடந்த 2010-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த தங்கமணி (28) என்கிற பெண்ணை காதலித்து, அவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராகுல் (10), ராகவன் (9) ஆகிய 2 மகன்களும், ஜெயஸ்ரீ (4) என்கிற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமாகி சில ஆண்டுகள் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார்.

மனைவியை கொலை செய்ய முயற்சி

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்தில் அதிர்ச்சியில் ரமேசுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றபோது, அதனை கண்ட பொதுமக்கள் துரத்தியபோது அவர் தப்பிப்பதற்காக ஒரு கிணற்றில் குதித்தார். அப்போது அவரது வலது கால் மூட்டுக்கு கீழே முறிந்து மாற்றுத்திறனாளியானதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு ரமேஷ் வேலைக்கு செல்வதையும், மனநலம் பாதிக்கப்பட்டதற்கு மாத்திரைகள் சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டு, தாய்-தந்தை, மனைவி ஆகியோரின் உழைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அவர்களிடம் ரமேஷ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். அவர் மனைவி தங்கமணியை பலமுறை கழுத்தை நெரித்தும், ஆயுதங்களை கொண்டும் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

10 மணியளவில்...

இதனால் அச்சமடைந்த தங்கமணி கணவரை விட்டுபிரிந்து, தனது 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தார். தற்போது ஒரு மாதமாக தங்கமணி கணவர் வீட்டின் அருகே உள்ள வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து கூலி வேலைக்கு சென்று, பிழைப்பு நடத்தி வருகிறார்.

மேலும் தங்கமணி கணவருடன் பேசாமல், மாமனார்-மாமியாருடன் மட்டும் பேசி வந்துள்ளார். அவரது குழந்தைகளும் தாத்தா-பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் ராமசாமி தனது வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் தூங்கி கொண்டிருந்ததை மருமகள் தங்கமணி பார்த்துள்ளார்.

தாய்-தந்தை படுகொலை

வழக்கமாக அதிகாலையில் மாமனார்-மாமியார் எழுந்து விடுவது வழக்கம். ஆனால் நேற்று காலையில் வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததை கண்ட தங்கமணி சந்தேகத்துடன் வீட்டை சுற்றி பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயில் ரத்தம் வெளியேறி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே பார்த்த போது, கணவர் ரமேஷ் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடிச்சென்று தனது வீட்டின் மாடியில் ஏறி பதுங்கிக் கொண்டார். வீட்டின் பூஜை அறையில் சென்று பார்த்தபோது ராமசாமி, செல்லம்மாள் ஆகிய 2 பேரும் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அப்போது தங்கமணி மாமனார்-மாமியாரின் உடல்களை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த லாடபுரம் கிராம நிர்வாக அதிகாரி அன்புராஜ் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே இந்த இரட்டை கொலை குறித்த தகவல் கிராமத்தில் காட்டுத்தீ போல் பரவியதால் வீட்டின் அருகே பொதுமக்களின் கூட்டம் கூடியது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, அனைத்து மகளிர் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை கலைய செய்து, பின்னர் மாடியில் பதுங்கியிருந்த ரமேசை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ரமேஷ் தனது தாய்-தந்தையை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

பரபரப்பு

இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார், படுகொலை செய்யப்பட்ட ராமசாமி, செல்லம்மாள் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்ற தாய்-தந்தையை கொலை செய்த ரமேசுக்கு போலீசார் தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும். அவர் மீண்டும் வெளியே வந்தால் என்னையும், எனது குழந்தைகளையும் இதேபோல் கொன்று விடுவார் என்று கண்ணீருடன் அவரது மனைவி தங்கமணி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்