திறந்தவெளி அன்னசத்திரமாக மாறிய திருச்சி காவிரி பாலத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவது திடீர் நிறுத்தம்

திறந்தவெளி அன்னசத்திரமாக மாறிய திருச்சி காவிரி பாலத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவது திடீர் என நிறுத்தப்பட்டு வரிசையில் காத்திருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-05-01 03:36 GMT
திருச்சி, 

திறந்தவெளி அன்னசத்திரமாக மாறிய திருச்சி காவிரி பாலத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவது திடீர் என நிறுத்தப்பட்டு வரிசையில் காத்திருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காவிரி பாலம்

மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சியையும், புண்ணிய பூமியாம் ஸ்ரீரங்கத்தையும் தரைமார்க்கமாக இணைப்பது காவிரி பாலம். பழம்பெருமை வாய்ந்த இந்த பாலத்தில் இருந்து பார்த்தால் வானுயர எழுந்து நிற்கும் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலையும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ராஜகோபுரத்தையும் ஒரு சேர பார்க்க முடியும்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் இரு கரைகளையும் தொட்டபடி செல்லும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் இதமான குளிர்ந்த காற்றை சுவாசிக்கவும் நடை பயிற்சியாளர்கள் இப்பாலத்தை பயன்படுத்துவது உண்டு.

வாழ்க்கை முடக்கம்

தற்போது காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் மக்கள் வாழ்க்கையை போல் வாகன போக்குவரத்தும் முடங்கி போய்விட்டதால் இப்பாலத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் சில நாட்கள் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் அதுவும் விலக்கி கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் காவிரி பாலத்தில் ஆதரவற்றவர்களும், கொரோனா ஊரடங்கினால் வேலை இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்தவர்களும் காலை, மாலை நேரங்களில் வந்து அமர்ந்து இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படி அமர்ந்து இருந்தவர்களுக்கு அவ்வழியாக காரில் சென்ற தன்னார்வலர்கள் முதலில் உணவு வழங்க தொடங்கினர்.

3 வேளையும்...

நாளடைவில் காலை, மதியம், இரவு என 3 வேளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் உணவு வழங்கும் நிலையாக மாறியது. காவிரி பாலத்திற்கு சென்று அமர்ந்தால் எப்படியும் பசியாற உணவு கிடைக்கும் என்ற ஒரு உறுதிப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாலத்தின் நடைபாதையில் உணவுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் காவிரி பாலம் திறந்தவெளி அன்னசத்திரமாக மாறி இருந்தது. நேற்று மதியம் வரை அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு உணவிற்காக காத்து இருந்தவர்களை போலீசார் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்லுமாறு கூறினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் பாலத்தின் இரு பகுதிக்கும் செல்ல அதன் பின்னர் அவர்களுக்கு வேனில் வந்த தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.

இதுபற்றி போலீசார் தரப்பில் விசாரித்தபோது, உணவு பொட்டலங்களை வாங்கி சாப்பிடும் ஆதரவற்றவர்கள், வட மாநில தொழிலாளர்கள் சமூக விலகலைபின்பற்றாமல் அங்கேயே படுத்து உறங்கி விடுகிறார்கள். இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டு கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் காரணமாக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உணவு வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்