ஊரடங்கால் வாகன போக்குவரத்து ரத்து: பெட்ரோல், டீசல் விற்பனை 80 சதவீதம் சரிவு
ஊரடங்கு காரணமாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் பெட்ரோல், டீசல் விற்பனை 80 சதவீதம் சரிவடைந்துள்ளது.
திருச்சி,
ஊரடங்கு காரணமாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் பெட்ரோல், டீசல் விற்பனை 80 சதவீதம் சரிவடைந்துள்ளது.
வாகன ஓட்டம் ரத்து
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பஸ், ரெயில்கள், ஆட்டோ உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பெரும் வருவாய் இழப்பை அரசு போக்குவரத்து கழகமும், தனியார் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்களும் சந்தித்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்கான பால் வண்டி, டேங்கர் லாரிகள் உள்ளிட்டவை தடையின்றி இயங்கி வருகிறது. அத்துடன் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பிற்பகல் 1 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களின் ஓட்டமும் முடிவுக்கு வந்து விடுகிறது.
ஊழியர்கள் பணியிழப்பு
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 180 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கொரோனா நடவடிக்கைக்கு முந்தைய காலகட்டத்தில் தினமும் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு குறைந்த பட்சம் 1,500 வாகனங்கள் வரை டீசல், பெட்ரோல் நிரப்பி சென்று உள்ளன.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் பஸ், கார், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் 15 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை ஆகிறது. 80 சதவீதம் வரை பெட்ரோல், டீசல் விற்பனை சரிவடைந்துள்ளது. விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மட்டுமே செயல்படுவதால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பல ஊழியர்கள் வேலையின்றி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட பெட்ரோல், டீசல் விற்பனை அசோசியேசன் தலைவர் சரவணன் கூறியதாவது:-
80 சதவீதம் விற்பனை சரிவு
கொரோனா ஊரடங்கால் வாகன சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை விலக்கு அளிக்கப்பட்டாலும் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள், காய்கறி ஏற்றி செல்லும் லாரிகள் என குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே இயக்கத்தில் உள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய காலகட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 180 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களிலும் தினமும் சராசரியாக தலா 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோலும், 2 ஆயிரம் லிட்டர் டீசலும் விற்பனை ஆகும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் தினமும் 1000 லிட்டர் பெட்ரோலும், 500 லிட்டர் டீசலும் விற்பனை என்ற நிலைக்கு வெகுவாக சரிந்து விட்டது. இது 80 சதவீத சரிவு ஆகும். இந்தியா முழுவதிலும் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களிலும் இதே விற்பனை சரிவைத்தான் சந்தித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.