கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரெயிலிலும் சமூக விலகல் கடைபிடிப்பு; ஒரு பெட்டியில் 24 பேர் பயணிக்க ஏற்பாடு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரெயிலிலும் சமூக விலகல் கடைபிடிக்கப்பட உள்ளது. ஒரு பெட்டியில் 24 நபர்கள் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரெயிலிலும் சமூக விலகல் கடைபிடிக்கப்பட உள்ளது. ஒரு பெட்டியில் 24 நபர்கள் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும் வருவாய் இழப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால், இந்தியா முழுவதும் ரெயில் போக்குவரத்து சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு விட்டது. ஏற்கனவே, ரெயிலில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு முழு பணமும் திரும்ப கொடுக்கப்பட்டு விட்டது. ஊரடங்கால் ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் இந்திய ரெயில்வே துறை கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை இழந்து வருகிறது. ரெயில்வே துறையில் வேலைபார்த்த அத்தனை ஊழியர்களும் தற்போது ஓய்வில் இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் சிறப்பு பார்சல் ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், விழுப்புரம் வழியாக சென்னைக்கும் என தினமும் சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சமூக விலகலுக்கான ஆயத்த ஏற்பாடுகள்
ஊரடங்கு உத்தரவு மே 3-ந் தேதியுடன் முடிவுக்கு வருமா? அல்லது மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுமா? என்ற ஐயப்பாடு எல்லோருக்கும் உள்ளது. சில மாநில அரசுகள் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
தமிழக அரசின் நிலைப்பாடும் 3-ந் தேதியுடன் ஊரடங்கை முடிப்பதா? அல்லது மத்திய அரசின் முடிவுக்கு இணங்க செயல்படுவதா? என்ற கருத்தொற்றுமை இல்லாமல் உள்ளது. இதற்கிடையே ஊரடங்கை நீட்டித்தாலும் ரெயில்களை சமூக விலகல் இடைவெளியை கடைபிடித்து இயங்க செய்யலாம் என்ற முடிவை மத்திய அமைச்சகம் எடுத்துள்ளது. அதற்கு முன்னேற்பாடாக சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வே, தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டிருக்கிறது.
ஒரு பெட்டியில் 24 பேர் பயணம்
அதன்படி, ஒரு ரெயில் பெட்டியில் உள்ள 12 கூபேவுக்கு, ஒரு கூபேவுக்கு தலா 6 பேர் வீதம் 72 பேர் பயணிக்ககூடிய தூங்கும் வசதியுள்ள பெட்டியில், இனி சமூக விலகலை கடைபிடித்து ஒரு கூபேவுக்கு 2 பயணிகள் வீதம் 24 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து ரெயில்வே கோட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
அடையாள குறியீடு
மேலும் ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்து கொண்டு வரிசையில் வரும் பயணிகள் 6 அடி இடைவெளி விட்டு பிளாட்பாரம் வரும் வகையில், திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் அடையாள குறியீடுகள் போடும் பணி நேற்று நடந்தது.
திருச்சி ஜங்சன் ரெயில் நிலைய மேலாளர் விருத்தாசலம், ரெயில்வே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் வள்ளிநாயகம், மனோகரன், ஏட்டு கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 6 அடி இடைவெளியில் பயணிகள் சமூக விலகலை கடைபிடிக்க அடையாள குறிகளை இட்டனர். இதன் மூலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை வைத்து ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.