மார்த்தாண்டம் அருகே உணவு கிடைக்காமல் 22 குடும்பத்தினர் அவதி கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்
மார்த்தாண்டம் அருகே உணவு கிடைக்காமல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 22 குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகிறார்கள்.
களியக்காவிளை,
மார்த்தாண்டம் அருகே உணவு கிடைக்காமல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 22 குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த 22 குடும்பத்தினர் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். இவர்கள், மார்த்தாண்டம் அருகே குழித்துறை ரெயில் நிலைய பகுதிகளிலும், கழுவன்திட்டையில் குழித்துறை மேற்கு ரெயில் நிலைய பகுதிகளிலும் உள்ள புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆறு, குளங்களில் மீன் பிடித்து வாழ்கை நடத்தி வந்தனர். மீன்கள் கிடைக்காவிட்டால், கோவில் மற்றும் ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.
அவதி
இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக மீன் பிடிக்க முடியாத காரணத்தாலும் கோவில் மற்றும் ஆலயங்களில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாலும் உணவு கிடைக்காமல் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட அனைவரும் கூடாரங்களிலேயே முடங்கி உள்ளனர். இவர்களுக்கு எப்போதாவது, பொதுமக்கள் உணவு பொருட்களை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதை வாங்கி சாப்பிடுகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் பசி-பட்டினியுடன் இருந்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான நாட்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு பால் வாங்கவோ மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
மேலும் இவர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் உள்ளனர். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சமூக அமைப்புகள் ஊரடங்கு தீரும் வரை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி இவர்களுக்கு முக கவசம் வழங்கி, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது பசி நீங்குவதோடு, கொரோனாவில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும். எனவே தங்களுக்கு உதவ யாராவது முன் வர மாட்டார்களா? என்று அவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.