குமரியில் முதியவருக்கு கொரோனா இல்லை மீண்டும் நடந்த பரிசோதனையில் உறுதியானதாக கலெக்டர் தகவல்

குமரியில் முதியவருக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-01 00:35 GMT
நாகர்கோவில், 

குமரியில் முதியவருக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டன. இதனால் யாரும் வெளியில் இருந்து இந்த பகுதிகளுக்குள் செல்லவும் முடியாது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேறவும் முடியாது. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடந்தது.

எதிர்பார்ப்பு

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் நோய்த்தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இன்னும் 6 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். அவர்களும் விரைவில் குணமடைவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் குமரி மக்கள் நிம்மதியுடன் இருந்தனர். சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட குமரி மாவட்டம், விரைவில் கொரோனா தொற்று இல்லை என்று உருவாகி பச்சை மண்டலமாக மாறும் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

முதியவருக்கு கொரோனா?

இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் மேல்பாலை அருகில் உள்ள மாங்காலை பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசு தமிழக அரசுக்கு தெரிவித்தது.

உடல்நலக்குறைவுடன் இருந்து வந்த இந்த முதியவர் அடிக்கடி கேரள மாநிலம் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, பாறசாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்று வருவதால் அங்கு வரும் நோயாளிகள் மூலம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

நோய்த்தொற்று இல்லை

இதனால் மாங்காலையில் உள்ள அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கி பழகியவர்கள் என மொத்தம் 11 பேருக்கு நேற்று முன்தினம் இரவு சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே குமரி மாவட்ட முதியவருக்கு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில அதிகாரிகள், குமரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பரிசோதனை

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மாங்காலையைச் சேர்ந்த முதியவருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் இருந்தும் இதை உறுதிப்படுத்தி விட்டனர்.

மாங்காலை பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் உள்ள குடும்பத்தினர், உறவினர்கள் என நெருங்கி பழகியவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் கொரொனா இல்லை என நமது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால் மாங்காலை பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக ஆக்கவில்லை. எனினும் பரிசோதனை செய்யப்பட்ட 11 பேரையும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

மேலும் இதுதொடர்பாக விஜயதரணி எம்.எல்.ஏ. கூறுகையில், மாங்காலை பகுதியைச் சேர்ந்த முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டரும், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவும் என்னிடம் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை. விளவங்கோடு தொகுதி கொரோனா இல்லாத பச்சை மண்டல பகுதியாகத்தான் உள்ளது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றார்.

மேலும் செய்திகள்