சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட வெளி மாநில மாணவர்கள் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாக உருக்கம்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட வெளி மாநில மாணவர்கள், ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாக உருக்கமான தகவலை தெரிவித்தனர்.
நாகர்கோவில்,
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட வெளி மாநில மாணவர்கள், ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாக உருக்கமான தகவலை தெரிவித்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
55 பயிற்சி மாணவர்கள்
மராட்டியம், ஆந்திரா, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 55 மாணவர்கள் ரெயில்பெட்டிகள் பராமரிப்பு தொடர்பான படிப்புக்கு ஒரு ஆண்டு பயிற்சிக்காக (அப்ரண்டீஸ்) நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்திருந்தனர்.
அவர்கள் கோட்டார் கம்போளம் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, கோட்டார் ரெயில் நிலைய யார்டு பகுதியில் வேலை செய்து வந்தனர். இவர்கள் ரெயில் நிலைய கேண்டீன் மற்றும் கோட்டார் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சாப்பிட்டு அன்றாட பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுக்கு கடந்த 14-ந் தேதியுடன் ஓராண்டு பயிற்சி நிறைவு பெறுவதாக இருந்தது.
உதவி கோரமுடியவில்லை
ஆனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், மாணவர்களுக்கான பயிற்சி நிறைவடைந்ததாக கூறி அவரவர் மாநிலங்களுக்கு செல்லும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் போக்குவரத்து முடக்கப்பட்டதால், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அவர்களால் செல்ல முடியவில்லை.
இதனால் 55 பேரும், தங்களிடம் இருந்த பணத்தின் மூலம் சாப்பிட்டு வந்தனர். இவ்வாறு பல நாட்களை கழித்ததால் இருந்த பணம் தீர்ந்து போனது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக ஒரு வேளை உணவு மட்டும் உண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்கு இந்தியை தவிர வேறு மொழி எதுவும் தெரியாததால் யாரிடமும் உதவியும் கோரமுடியவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்
இந்த நிலையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி 20 மாணவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் இந்தியில் பேசினர். அதிகாரிகளுக்கு இந்தி தெரியாததால் மாணவர்கள் சொல்வது புரியவில்லை.
இதையடுத்து அங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ராணுவ வீரர் சுனில்குமாருக்கு இந்தி தெரியும் என்பதால், அவர் அந்த மாணவர்களிடம் பேசினார். அப்போது அவர்கள் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தனர். இதை சுனில்குமார், கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
உணவு பொருட்கள்
உடனே அதிகாரிகள் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால், உங்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாது. 55 மாணவர்களுக்கும் தேவையான உணவு பொருட் களை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதை சுனில்குமார் அந்த மாணவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் உணவு பொருட்கள் தங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக் கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து மாணவர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கே சென்று அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டனர். மேலும் தன்னார்வலர்கள் மூலமாக காய்கறிகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் வெளிமாநில மாணவர்கள் நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் கலெக் டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.