அரசின் கொரோனா முறைகேடுகளை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் - டி.கே.சிவக்குமார் பேச்சு
“அரசின் கொரோனா முறைகேடுகளை பார்த்துக் கொண்டு இனி நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
“கொரோனா பரவி வரும் இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் கடந்த ஒரு மாதமாக அரசுக்கு ஆதரவாக இருந்து வருகிறோம். மனிதநேய அடிப்படையில் நாங்கள் அரசியல் செய்யாமல் இருக்கிறோம்.
மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் இடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மத்திய-மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. உணவு தானிய வினியோகத்தில் 20 சதவீதம் அளவுக்கு தான் பணிகள் நடந்துள்ளன.
அமைதி காக்க மாட்டோம்
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு சரியான முறையில் ஓய்வூதி யத்தை கூட வழங்கவில்லை. இதை முதல்-மந்திரியே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நெருக் கடியான நேரத்தில் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் ஏழை மக்களுக்கு உதவிகளை செய்துள்ளன. இந்த விஷயத்தில் நாங்கள் அரசியலை தொலைவில் வைத்துவிட்டோம். அரசின் கொரோனா முறைகேடுகளை பார்த்துக் கொண்டு இனி நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இனியும் அமைதியாக இருந்தால், மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்வது போல் ஆகிவிடும்.
விவசாயிகளிடம் இருந்து தக்காளி உள்பட பழங்களை அரசு கொள்முதல் செய்யவில்லை. வாகன கடன் வாங்கியவர்களுக்கு தவணை செலுத்த விலக்கு அளிப்பது, வட்டியை தள்ளுபடி செய்வது போன்ற எந்த உதவியையும் இந்த அரசு செய்யவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அரசை நான் இதற்கு முன் எப்போதும் பார்க்கவில்லை.
இணைந்து போராடலாம்
தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். முஸ்லிம் வியாபாரிகளை தோட்டத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். கூலித்தொழிலாளர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. அரசுக்கு எதிராக நாம் இணைந்து போராடலாம். இந்த மாநில மக்களின் உயிரையும், வாழ்க்கையையும் மீட்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.”
இவ்வாறு டி.கே.சிவக் குமார் பேசினார்.