கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் - சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தும் என்று சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-05-01 00:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தினரின் நிலை குறித்து ஆலோசிக்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.

இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் மந்திரிகள் ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர், குபேந்திரரெட்டி எம்.பி., லோக் தாந்திரிக ஜனதாதளம் தலைவர் எம்.பி.நாடகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஜி.என்.நாகராஜூ, பசவராஜ், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக சுவாதி சுந்தரேஷ், கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குருபூர் சாந்தகுமார், நாகேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், விவசாயிகளின் நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இணைந்து போராட்டம்

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன. மாநிலத்தில் கடந்த 37 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து 4 மணி நேரம் நாங்கள் விவாதித்தோம்.

இன்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் கோரிக்கைகள் அடங்கிய ஒரு பட்டியலை தயாரிக்க உள்ளோம். அதன் பிறகு அந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை முதல்-மந்திரியிடம் நேரில் வழங்க முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

உழைக்கும் வர்க்கம்

இது தேர்தல் அரசியல் அல்ல. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினருக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். முதல்-மந்திரி எடியூரப்பா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நாங்கள் பங்கேற்றோம். இதில் நாங்கள் கூறிய ஆலோசனைகள், கோரிக்கைகளை அரசு அமல்படுத்தவில்லை.

கஷ்டத்தில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு உதவ அரசு ஆர்வம் காட்டவில்லை. இப்போது எதிர்க்கட்சிகள் இணைந்து வழங்கும் கோரிக்கைகளையாவது அரசு நிறைவேற்ற வேண்டும். மாநில மக்களின் நலன் கருதி, அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். நாங்கள் எந்த நிலையிலும் அரசியல் செய்யவில்லை. இப்போதும் அரசியல் செய்யும் நோக்கம் இல்லை. கஷ்டத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளோம்.

பொருளாதார நிலை

மாநில அரசின் பொருளாதார நிலை சீர்கெட்டுவிட்டது என்று கூறி நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு கேரளா அரசு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்யவில்லையா?. நிதி பிரச்சினை இருந்தால் மத்திய அரசிடம் கர்நாடகம் நிதியை கேட்டு பெற வேண்டும்.”

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்