ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், இன்று முதல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தகவல்

பெங்களூருவில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அவற்றின் உரிமையாளர்களிடம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஒப்படைக்கப்படும் என்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-30 23:55 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இதுவரை பெங்களூருவில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு கோர்ட்டில் அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடத்தில் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது பாஸ் இல்லாமல் தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பெங்களூருவில் மட்டும் இதுவரை 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முதல்-மந்திரி உத்தரவு

அந்த வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் படி முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி நாளை(அதாவது இன்று) முதல் வாகனங்கள், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை யாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களுக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அபராதம் செலுத்திவிட்டு வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், ஆட்டோக்களுக்கும் ரூ.500-ம், கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு ரூ.1,000-மும் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் அபராதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

முகக்கவசம் அணிய வேண்டும்

இதில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் முதலில் வழங்கப்படும். பின்னர் தேதி வாரியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த தேதிகளில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களை பெற யாரும் முண்டியடித்துக் கொண்டு வர வேண்டாம். வாகனங்களை பெற வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதுவரை தேவையின்றி சாலையில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்