முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கூடாது வியாபாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் நகரில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2020-04-30 22:33 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நேதாஜி சாலை, எம்.ஜி. சாலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மகாகவி பாரதியார் வீதி, ரெயில் நிலையம், முத்தையா தெரு, சந்தானகோபால் தெரு, கைவல்லியர் தெரு ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? முக கவசம் அணிந்து வருகிறார்களா? என பார்வையிட்டதோடு, முக கவசம் அணியாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு, பொருட்களை வழங்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதிகளான கே.கே.சாலை, கைவல்லியர் தெரு, லட்சுமி நகர் பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்து அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா? எனவும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் முறையாக செல்கிறதா? என்று நகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்காணித்து பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா? என போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் விதியை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அத்தியாவசிய பொருட் கள் அனைத்தும் வீடு தேடி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒலிபெருக்கி மூலம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு ஏற்பாடு

இதையடுத்து கோலியனூர் கூட்டுசாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை, புதுச்சேரி- கடலூர் மார்க்கத்தில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு வரும் அரசு ஊழியர்கள், மருத்துவ துறையினரின் அடையாள அட்டைகளை சோதனை செய்து நகரத்திற்குள் செல்ல அனுமதிக்கலாம் என்றும் மற்றவர்களை பனையபுரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடும்படியும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்