பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற வெளியே வர வேண்டாம்: கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற வெளியே வர வேண்டாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-04-30 23:15 GMT
கிருஷ்ணகிரி,

கட்டிகானப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற வெளியே வர வேண்டாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்துள்ளதே தவிர முற்றிலும் அகற்ற இயலவில்லை. இதற்கு சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்காததே காரணம்.

இதிலிருந்து பொதுமக்களை முற்றிலும் பாதுகாக்கும் பொருட்டு, கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டிகானப்பள்ளி கிராம மக்கள் தங்கள் வீட்டிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியே வரவேண்டாம். தங்களுக்கு தேவையான பொருட்களை பெற அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களில் உள்ள செல்போன் எண்களை தொடர்பு கொண்டு, பொருட்களைப் பெற்றுக் கொண்டு அதற்குரிய பணத்தை செலுத்தினால் போதும்.

பொருட்களைப் பெறுவதற்கு தன்னார்வலர்களுக்கு தனியாக பணம் வழங்கத் தேவையில்லை. பொருட்களுக்கு உண்டான பணத்தை மட்டும் வழங்கினால் போதும். மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிற்குள் இருந்தாலும் அவ்வப்போது சோப்பால் கைகளைக் கழுவ வேண்டும்.எனவே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்