மதுரை அருகே பிரசவமான பெண்ணுக்கு கொரோனா; ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது

மதுரை அருகே சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அதன்பின்னர் நடந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், பிரசவம் பார்த்த டாக்டர்-செவிலியர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2020-05-01 00:00 GMT
வாடிப்பட்டி, 

மதுரை மாவட்டத்தில் நேற்று சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் விளாங்குடியை சேர்ந்த 32 வயது பெண்ணும் ஒருவர். இவருடைய கணவர் ஈரோட்டை சேர்ந்தவர். இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக அந்த பெண் கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளதால் அருகில் இருந்த சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அந்த பெண்ணின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

உடனே அந்த பெண் மற்றும் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனை தனி வார்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணுடன் வந்தவர்களையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கும், பிறந்த குழந்தைக்கும் ரத்த பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர், பணியாளர்களின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து சுகாதார துறையால் அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

மேலும் சுகாதார நிலையத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த பணியினை செயல் அலுவலர் சுந்தரி, குடிநீர் மேற்பார்வையாளர் சுந்தரராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் அந்த பெண்ணுக்கு கொரோனா வந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் கணவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாடு சென்று திரும்பியவர் என தெரியவந்தது. எனவே அதன் மூலம் கொரோனா பரவியதா? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்