ஊரடங்கால் வீணாகும் பூசணிக்காய்கள் விவசாயிகள் கவலை
ஊரடங்கினால் சந்தைப்படுத்த முடியாததால் வெயிலில் பூசணிக்காய்கள் வெம்பி வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரம்பலூர்,
ஊரடங்கினால் சந்தைப்படுத்த முடியாததால் வெயிலில் பூசணிக்காய்கள் வெம்பி வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏமாற்றமே மிஞ்சியது
சமையலில் முக்கிய இடம் வகிக்கும் பூசணிக்காயை பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பயிரிட்டிருந்த னர்.
குறைவான தண்ணீரில் அதிக மகசூல் கொடுக்கும் என்று நம்பி பூசணியை பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ஏமாற்றமே மிஞ்சியது. விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டும், போதிய தண்ணீரின்றியும், பூச்சி நோய் தாக்குதலாலும், கடும் வெயிலாலும் பூசணிக்கொடிகள் கருகி வந்தன.
ஆனாலும் விவசாயிகள் மனம் தளராமல் பூசணி கொடியை சரியாக பராமரித்து பூசணிக்காய்களை நன்கு விளைச்சலாக்கி அறுவடைக்கு தயார் நிலைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அறுவடைக்கு தயாராகி இருந்த பூசணிக்காயை மார்க்கெட்டுக்கு கூட கொண்டு செல்ல, முடியாமல் போனதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு
சில விவசாயிகள் கொடியில் இருந்து பறிக்காமல் விட்டதால் கடும் வெயிலில் காய்கள் வெம்பிவிட்டன. இதுகுறித்து பெரம்பலூர் அருகே உள்ள எறையசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில், 3 மாத பயிரான வெள்ளை நிற பூசணிக்காய் 80 நாளில் விளைச்சலாகும். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பூசணிக்காயை பறித்து கொண்டிருக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்கின்றோம். ஏற்கனவே போதிய தண்ணீர் இல்லாததாலும், பூச்சி நோயாலும், மயில்கள் கொத்தியும் பூசணிக்காய்கள் பாதிக்கப்பட்டன.
நிவாரணம் வழங்க வேண்டும்
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து இல்லாததாலும் பூசணிக்காயை பறிக்காமல், கொடியிலேயே வெம்பி கருகி வீணாகி வருகிறது. ஊரடங்கிற்கு முன்னதாக ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.13 வரை விற்பனையானது. ஆனால், தற்போது சொற்ப விலைக்கு உள்ளூர் வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
சில சமயங்களில், அவர்களும் கொள்முதல் செய்ய வருவதில்லை. வெம்பிய காய்களை குப்பைகளில் தான்போடுகிறோம். ஊரடங்கினால் பூசணியை பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நஷ்டத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.