ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட குறு-சிறு தொழில் முனைவோருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் அரசுக்கு வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட குறு-சிறு தொழில் முனைவோருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-04-30 06:17 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட குறு-சிறு தொழில் முனைவோருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

முடங்கி போனது

பெரம்பலூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவை தவிர வெல்டிங் வேலைகள் மேற்கொள்ளும் 250-க்கும் மேற்பட்ட கிரில் பட்டறைகளும், மோட்டார் மெக்கானிக், லேத் பட்டறைகள், வைண்டிங்-ரீவைண்டிங் தொழில்கள், மரச்செக்கு ஆலைகள், ஹாலோ பிரிக் செங்கல் உற்பத்திக்கூடங்கள், மின்சாரத்தால் இயங்கும் இழைப்பு பட்டறைகள், மோட்டார் மெக்கானிக்குகள் என திறன்சார்ந்த தொழில்களும் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவினால் முடங்கிப்போய் உள்ளன.

பெரம்பலூர் மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத்தலைவர் ஓம்சக்தி உதயகுமார் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் கூடங்களில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

நிறுத்திட வேண்டும்

மேலும் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு வரையிலான மின்கட்டணத்தை கட்டமுடியவில்லை. ஆகவே மின்கட்டணத்தை தள்ளுபடி செய்திட வேண்டும். தொடர்ந்து 4 மாதம் மின்கட்டணத்தை தமிழ்நாடு தொடர் மின் கழகம் வசூலிப்பதை நிறுத்திட வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தபிறகு இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக சிட்கோ தொழிற்பேட்டையின் மேற்கு பகுதியில் 150 ஏக்கர் பரப்பில் காலியாக உள்ள நிலத்தில் 2-வது தொழிற்பேட்டையை தொடங்கி புதிய தொழில்முனைவோருக்கு வாழ்வு அளிக்க வேண்டும், என்றார்.

ரூ.10 ஆயிரம் நிவாரணம்

எளம்பலூர்சிட்கோ தொழில்பேட்டை தொழில் கூட்டமைப்பின் (கிளஸ்டர்) பொறுப்பாளர் வேத.லெட்சு மணன் கூறுகையில், எளம்பலூர் கிராமத்தில் 44 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சிட்கோ தொழில்பேட்டையில் மொத்தம் 94 மனைகள் உள்ளன. இவற்றில் உள்ள ஏறத்தாழ 70 சதவீத தொழிற்சாலைகள் இயங்கி வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவினால் மூடப்பட்டுள்ளன.

அன்றாடம் வாழ்க்கையை நகர்த்துவதே கடினமாக உள்ள நிலையில் குறு- சிறு தொழில்கள் எவ்வித உற்பத்தியும் செய்யமுடியாமல் தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் முடங்கிக்கிடக்கிறோம். எங்களது வாழ்வாதாரம் செயலிழந்துள்ளது. ஆகவே பெரம்பலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள குறு, சிறு தொழில் முனைவோருக்கு தமிழக அரசு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும், என்றார்.

85 சதவீதம்

வீரபோயர் இளைஞர் பேரவை மாநில தலைவர் சிவசாமி கூறுகையில், கட்டுமானப்பணி, கூலித்தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஓட்டுனர் தொழிலாளர்கள் என 15 சதவீதம் பேர் மட்டுமே அந்தந்த நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு உறுப்பினராக உள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்களில் 85 சதவீதம் பேர் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக தற்போது வரை இல்லை.

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தும், திரும்ப புதுப்பிக்க இயலாத சூழ்நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு அந்தந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து உரிய நிவாரண பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

6 மாதமாக நீட்டித்து...

தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் நீலாம்பிகா குமார் கூறுகையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலைகொடுக்க முடியாத கடினமான சூழலில், நாங்கள் வெளியில் இருந்து கடன்பெற்று, கிரில் தொழிலாளர்களின் குடும்ப அத்தியாவசிய செலவினங்களுக்காக கணக்கு பார்க்காமல், நிதிஉதவி அளித்துவருகிறோம்.

தொழில் கடன் பெற்றுள்ளவர்கள் மாதத்தவணையை செலுத்துவதற்கு முடியாமல் கடன்சுமையால் அவதிப்பட்டுவருகிறோம். ஆகவே 3 மாதத்திற்கு வங்கி கடனுக்கான இ.எம்.ஐ. செலுத்தும் தவணையில் கால அவகாசத்தை 6 மாதமாக நீட்டித்து, இந்த காலத்திற்குரிய வட்டியை தள்ளுபடி செய்திடவேண்டும். கிரில் தயாரிக்கும் தொழில்முனைவோருக்கு மாதத்திற்கு தலா ரூ.10 ஆயிரமும், கிரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும். மார்ச் முதல் ஆகஸ்டு மாதம் வரை மின்கட்டணத்தை தள்ளுபடி செய்திட தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிடவேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்