கொரோனா எதிரொலி: முழு கவச உடைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
கொரோனா வைரசால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
புதுக்கோட்டை,
கொரோனா வைரசால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முக கவசம் அணிய வேண்டும் என்பதால் அதனை மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சில முக கவசம் தயாரிப்பில் ஈடுபட்டு விற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தனிவார்டில் பணியாற்றும் டாக்டர்கள் உள்பட தூய்மை பணியாளர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முழு கவச உடை அணிந்து பணியாற்றுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த கவச உடைகள் தயாரிக்கும் பணியில் ஒரு சில மகளிர் சுய உதவிக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் மகளிர் சுய உதவிக்குழு கடைகளில் ஒரு குழுவினர் முழு கவச உடைகள் தயாரித்து விற்கின்றனர். இதுகுறித்து குழுவின் தலைவி இன்பவள்ளி கூறுகையில், “நாங்கள் முதலில் நாப்கின் தயாரித்து விற்று வந்தோம். இதனை தர்மபுரி மாவட்டத்திற்கு அரசு மூலம் வினியோகித்தோம். கொரோனா வைரஸ் தொடங்கிய பின் நாப்கின் தயாரிப்பை நிறுத்திவிட்டோம். இதனையடுத்து முக கவசம் தயாரிப்பில் ஈடுபட்டு விற்று வந்தோம். தற்போது முழு கவச உடைகள் தயாரித்து விற்று வருகிறோம். இதற்கான மூலப்பொருட்கள் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக முழு கவச உடைகளை தயாரித்து விற்று வருகிறோம். ரூ.150 முதல் ரூ.290-வரைக்கும் முழு கவச உடை விற்கப்படுகிறது. அவ்வப்போது டாக்டர்கள் ஆர்டர் கொடுத்து முழு கவச உடையை பெற்று செல்கின்றனர். இந்த முழு கவச உடையை ஒரு முறை மட்டுமே பயன் படுத்த முடியும்” என்றார்.