ஒருவர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும் கரூர்
அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெறுவதால் கொரோனா இல்லாத மாவட்டமாக கரூர் மாறுகிறது.
கரூர்,
அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெறுவதால் கொரோனா இல்லாத மாவட்டமாக கரூர் மாறுகிறது.
7 பேர் குணமடைந்தனர்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கரூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் என மொத்தம் 7 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் குணமடைந்ததையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று உறுதி செய்யப்பட்ட கரூரை சேர்ந்த ஒருவரும், திண்டுக்கல்லை சேர்ந்த 6 பேரும், நாமக்கல்லை சேர்ந்த 8 பேரும் என மொத்தம் 15 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரூரை சேர்ந்த 41 பேரும், நாமக்கல்லை சேர்ந்த 50 பேரும், திண்டுக்கல்லை சேர்ந்த 72 பேரும் என மொத்தம் 163 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா இல்லாத மாவட்டம்
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நன்றாக இருப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதால் அது முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். சிகிச்சையில் இருக்கும் அந்த நபர் வீடு திரும்பும் பட்சத்தில் கரூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக புதிய தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.