கவர்னர் கிரண்பெடியை கண்டித்து சட்டசபை வளாகத்தில் அமைச்சர் திடீர் தர்ணா

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2020-04-30 04:14 GMT
புதுச்சேரி,

ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 14 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால் அவர்களை எல்லைக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் கடந்த 4 நாட்களாக எல்லைப் பகுதியில் காத்திருக்கின்றனர்.

இதற்கு கவர்னர் கிரண்பெடி தான் காரணம் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டினார். அவர்களை ஊருக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். இருப்பினும் அவர்களை ஏனாமில் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

கருப்பு சட்டை அணிந்து தர்ணா

இதனால் அதிர்ச்சி அடைந்த ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ.வும், சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று காலை 10.45 மணி அளவில் சட்டசபை வளாகத்தில் சட்டமன்ற கூட்ட அரங்கு அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார். அமைச்சரின் போராட்டத்தை அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் அங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவரை தனது அலுவலகத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த மல்லாடி கிருஷ்ணாராவ் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

மதிய உணவை தனது அலுவலகத்திலேயே சாப்பிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மதிய வேளையில் அமர்ந்திருந்த இடத்திலேயே படுத்து சிறிது நேரம் ஓய்வும் எடுத்தார். மாலை 5.30 மணி அளவில் மீண்டும் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சந்தித்து பேசினார். அப்போது தொழிலாளர்களை ஏனாமில் அனுமதிக்கும் மத்திய அரசின் உத்தரவினை காட்டினார். இதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

கிரண்பெடிக்கு எதிரான போராட்டம்

முன்னதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏனாம் பகுதியை சேர்ந்த 14 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏனாம் எல்லையை அடைந்தனர். அவர்களை முதலில் அனுமதித்து தனிமைப்படுத்தி வைக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் கவர்னர் கிரண்பெடி உத்தரவின்பேரில் அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதற்கிடையே முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் அவர்களை ஏனாமில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவையும் நிறைவேற்ற அதிகாரிகள் மறுக்கிறார்கள்.

எனவே நான் சபாநாயகரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு, இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இது புதுவை அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. கவர்னர் கிரண்பெடிக்கு எதிரான போராட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்