டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு: வைகையாற்றில் கூட்டமாக இருந்த வாலிபர்கள் ஓட்டம்

மானாமதுரை வைகையாற்றில் போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். இதைப்பார்த்த ஆற்றில் கூட்டமாக இருந்த வாலிபார்கள் ஓட்டம் பிடித்தனர்.

Update: 2020-04-30 00:47 GMT
மானாமதுரை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரிபவர்களை போலீசார் பிடித்து தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் போலீசார் டிரோன் (பறக்கும் கேமரா) மூலம் ஆட்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் காட்டு பகுதியில் சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் ஏதும் நடக்கிறதா என்பதையும் இந்த கேமரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் உத்தரவின் பேரில், மானாமதுரை துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் மற்றும் போலீசார் இடைக்காட்டூர், வைகையாற்று பகுதி, கிளங்காட்டூர் பகுதிகளில் சாராயம் காய்ச்சும் தொழிலில் யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பதை சோதனை செய்வதற்காக போலீசார் டிரோன் கேமரா மூலம் சோதனை நடத்தினர்.

அப்போது இடைக்காட்டூர் வைகையாற்று பகுதியில் கூட்டமாக இருந்த வாலிபர்கள், சிறுவர்கள் ஆகியோர் இந்த கேமராவை பார்த்ததும் தலைதெறிக்க தப்பி ஓடினர். இருந்தாலும் அவர்கள் ஓடும் தூரம் வரை இந்த கேமராவை போலீசார் பறக்க விட்டு சோதனை நடத்தினர். இதையடுத்து வேகமாக ஓட முடியாத சிலர் வைகையாற்று பகுதியில் இருந்த நாணல்புதர்களுக்குள் மறைந்து கொண்டனர். மீண்டும் அந்த பகுதியில் சோதனை செய்த போது மறைந்திருந்த வாலிபர்கள் அருகில் இருந்த தங்களது வீடுகளுக்குள் சென்று விட்டனர். இதனால் நேற்று அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்