பெங்களூருவில் இன்று நடக்கிறது சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் - தொழிலாளர்களின் பாதிப்பு குறித்து ஆலோசனை
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் சிக்கலில் இருக்கிறார்கள். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். இந்த கூட்டம் 30-ந் தேதி (அதாவது இன்று) பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கமிட்டி அரங்கத்தில் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
இதில் பங்கேற்குமாறு கேட்டு ஜனதா தளம்(எஸ்), ஐக்கிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அன்றாடம் உழைத்து சம்பாதித்து வாழ்க்கையை நடத்தும் கூலித்தொழிலாளர்கள் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரிக்கு கடிதம் மூலம் விவரங்களை தெரிவித்துள்ளேன்.
விவசாய பயிர்கள் சேதம்
விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பொருட்களை விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களின் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்று விற்க வசதி இல்லாததால், அவர்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து, விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
பயிர் சேதத்திற்கு மாநில அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள் கிடைக்கவில்லை. இந்த விஷயங்களில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைகளை பெற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.”
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.