நாகர்கோவிலில் 52 மி.மீ. மழை: பலத்த காற்றால் வாழைகள் நாசம் விவசாயிகள் கவலை
நாகர்கோவிலில் 52 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும் பலத்த காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் 52 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும் பலத்த காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அனலாய் தகித்தது
குமரி மாவட்டத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பகல் நேரங்களில் வெயிலின் வெப்பம் அனலாய் தகிக்கிறது.
இதன் தாக்கம் இரவிலும் எதிரொலிக்கிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறிகள் சுழன்றாலும் வெயிலின் புழுக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்தனர்.
பலத்த மழை
இவ்வாறு அவதிப்பட்டு வரும் குமரி மாவட்ட மக்களை குளிர்விக்கும் வகையில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் நாகர்கோவிலில் பலத்த மழை பெய்தது. வடசேரி உள்ளிட்ட சில பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலையிலும் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. சிறிது நேரமே இந்த மழை பெய்திருந்தாலும், தொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.)வருமாறு:-
வாழைகள் சாய்ந்தன
பேச்சிப்பாறை 6, பெருஞ்சாணி 11, புத்தன் அணை 10.6, சிற்றார் 1-18.2, சிற்றார் 2-12, மாம்பழத்துறையாறு 30, முக்கடல் அணை 16.6, நாகர்கோவில் 52.4, சுருளக்கோடு 8, குளச்சல் 3.6, இரணியல் 7.2, பாலமோர் 5.2, கோழிப்போர்விளை 8, அடையாமடை 19, குருந்தங்கோடு 4.2, முள்ளங்கினாவிளை 23, ஆனைக்கிடங்கு 21.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இந்த மழையால் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தோப்பில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகின. இதேபோல் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு வாழைத்தோப்பிலும் ஏராளமான வாழைகள் சூறைக்காற்றில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூடாரம் சரிந்து விழுந்தன. இதனால் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வியாபாரிகள் கடுமையான வெயிலில் அமர்ந்து காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ததை காணமுடிந்தது.
அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் பெய்த மழையில் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு வாழைத்தோப்பில் 600 வாழைகள் முறிந்து விழுந்துள்ளன. கன்னிப்பூ நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். பறக்கை பெரிய குளம், பால்குளம் போன்ற குளத்து பாசனத்தை நம்பியிருக்கும் நெல் விவசாயிகள் நெல் நாற்றங்கால் அமைத்துள்ளனர். அணை தண்ணீரை நம்பியிருக்கும் விவசாயிகள் வருகிற மே மாத மத்தியில் நாற்றங்கால் அமைத்து இறுதியில் நாற்று நடும் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.