மங்களூரு அருகே நிலத்தகராறில் பயங்கரம்: ஓய்வு பெற்ற துணை ராணுவ வீரர்- மனைவி குத்திக்கொலை - பக்கத்து வீட்டுக்காரர் கைது
மங்களூரு அருகே நிலத்தகராறில் ஓய்வுபெற்ற துணை ராணுவ வீரரும், அவரது மனைவியும் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு,
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே முல்கி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலிஞ்சே பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் டிசோசா (வயது 48). ஓய்வு பெற்ற துணை ராணுவ வீரர். இவரது மனைவி ஹெலன் டிசோசா (42). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அல்போன்ஸ் சல்தானா (51). இவருக்கும், வின்சென்ட் டிசோசாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வருகிறது. இதனால் இருவரின் குடும்பத்தினர் நடுவில் அடிக்கடி அடிதடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலையில் வின்சென்ட் டிசோசா, அல்போன்ஸ் சல்தானா ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சினையில் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் கடும் வாக்குவாதம் முற்றி, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் வின்சென்ட் டிசோசா வீட்டில் இருந்து கத்தியை எடுத்துக் கொண்டு அல்போன்ஸ் சல்தானாவை குத்திக் கொல்ல சென்றுள்ளார்.
கணவன்-மனைவி குத்திக்கொலை
இதை பார்த்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அல்போன்ஸ் சல்தானாவும் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து வின்சென்ட் டிசோசாவை சரமாரியாக குத்தினார்.
மேலும் தடுக்க வந்த வின்சென்ட் டிசோசாவின் மனைவி ஹெலன் டிசோசாவையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வின்சென்ட் டிசோசா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தார். மேலும் படுகாயமடைந்த ஹெலன் டிசோசா ஆஸ்பத்திரிக்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த முல்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நிலத்தகராறில் வின்சென்ட் டிசோசா- ஹெலன் டிசோசா ஆகியோரை அல்போன்ஸ் சல்தானா குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அல்போன்ஸ் சல்தானாவை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் கொலையான தம்பதியின் உடல்களை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக முல்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். முன்னதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக முல்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான அல்போன்ஸ் சல்தானாவிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவர், மங்களூரு மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி, போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து அவர், மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.