அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் - சென்னை மாநகராட்சி உத்தரவு
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தினசரி கொரோனா நோய்த்தொற்று தடுக்கும் வகையில் பல்வேறு நவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி கொண்டு நோய் தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது அலுவலகங்களிலும் தினசரி 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கி கிளைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் ஏ.டி.எம். மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்பு உடனடியாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.
கிருமிநாசினி தெளிக்கும் பணிகளுக்காக தனித்தனியாக பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும். மேலும் தங்களின் அலுவலகங்கள் குறித்த விவரம், கிருமிநாசினி எந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலருக்கு ar-o-h-q-p-r-op@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 94451 90742 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கும் மே 1-ந் தேதிக்குள்(நாளை) தெரிவிக்க வேண்டும்.
அனைத்து அலுவலகங்களும் சுகாதாரத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும். அப்போது, இதனை பின்பற்றாத நிறுவனங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.