ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக கறி விருந்து வைத்து பிறந்தநாள் கொண்டாடிய 10 பேர் கைது - டிக்டாக்கில் பதிவிட்டதால் சிக்கினர்
ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக கறி விருந்து வைத்து பிறந்தநாள் கொண்டாடி, டிக்டாக்கில் பதிவிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆரணியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.
இவர் நேற்று தனது பிறந்த நாளை கிராம எல்லையில் உள்ள காட்டில் கொண்டாடினார். அப்போது அவர் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர்கள் தியாகு (26) உள்பட 10 பேர் கூட்டமாக ஜாலியாக கறி விருந்து சாப்பிட்டு கொண்டே டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து, பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊரடங்கு உத்தரவின் போது கூட்டமாக சேர்ந்து விருந்து சாப்பிட்டதற்காக தியாகு உள்பட 10 பேரை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.