ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி; 65 விசைப்படகுகள் சேதம் - கரை ஒதுங்கிய படகுகளை பார்த்து மீனவர்கள் வேதனை

ராமேசுவரத்தில் நேற்று அதிகாலையில் பலத்த சூறாவளி வீசியது. இதில் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், கரை ஒதுங்கியும் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்தனர்.

Update: 2020-04-29 23:00 GMT
ராமேசுவரம், 

ஊரடங்கு மற்றும் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடந்த 1 மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்க செல்லாமல் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் ஏராளமான விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென காற்று வீச தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகமாகி சூறாவளியாக வீசியது. அப்போது இடி-மின்னலுடன் மழையும் பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.

இதனால் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த 25-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் நங்கூர கயிறுகள் அறுந்தன. அந்த படகுகள் அடுத்தடுத்து நின்ற படகுகளுடன் பலமாக மோதி சேதம் அடைந்தன.

இதுதவிர நங்கூர கயிறுகள் அறுந்த மேலும் பல விசைப்படகுகள் ராட்சத அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டு ஒதுங்கி கிடந்தன. அவற்றிலும் பெரும்பாலான படகுகள் சேதம் அடைந்து காணப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நேற்று காலையில் ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் துறைமுக கடற்கரை பகுதிக்கு விரைந்து வந்தனர். படகுகளின் நிலையை கண்டு அவர்கள் வேதனை அடைந்தனர். ஒன்றோடொன்று மோதி சேதமான நிலையில் கிடந்த படகுகளை உடனடியாக மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணி நீண்ட நேரம் நடந்தது.

அது போல் பலத்த காற்றால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் போலீசாரின் பாதுகாப்பிற்காக தகர சீட்டுகளால் அமைக்கப்பட்டிருந்த காவல் உதவி மைய கூடாரமும் முழுமையாக சேதம் அடைந்தது.

கிழக்கு வாசல் எதிரே கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் உள்ள பெரிய பிளாஸ்டிக் கேன் ஒன்றும் உருண்டு வாசல் எதிரே விழுந்து கிடந்தது. பொந்தம்புளி பகுதியில் சில கடைகளின் மேற்கூரை பறந்து சாலையோரம் கிடந்தன. அதுபோல் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தும், சாய்ந்தும் கிடந்தன. தகவல் அறிந்ததும் போலீசார், மீட்பு படையினர் சென்று அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பலத்த சூறாவளியால் சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து மின்தடையும் ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரத்துக்கு பின்பே மின் வினியோகம் சீரானது.

விசைப்படகுகள் சேதம் அடைந்தது பற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு ஊரடங்கு, ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்து தொடங்கிய 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஆகியவற்றால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தவித்து வருகிறோம். ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து மீனவர்கள் குடும்பத்துடன் வாடிவரும் சூழ்நிலையில் திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்றால் 25 படகுகள் ஒன்றோடொன்று மோதி பலகைகள் உடைந்து பலத்த சேதமாகி உள்ளன. 40 படகுகள் நங்கூர கயிறுகள் அறுந்து கரை ஒதுங்கியதால் சேதமாயின. சூறாவளி காற்றால் சேதமான படகுகள் ஒவ்வொன்றுக்கும் மராமத்து பணிகள் செய்ய அதிகம் செலவாகும். ஆகவே தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல வசதியாக சேதமான படகுகளை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே சேதம் அடைந்த படகுகளை ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் சேத விவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் அர்ச்சுனன், அவை தலைவர் குணசேகரன், பொருளாளர் தர்மர், திருக்கோவில் அண்ணா தொழிற்சங்க தலைவர் அண்ணாத்துரை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்