விழுப்புரம் அரசு டாக்டருக்கு கொரோனா: குடும்பத்தினர் உள்பட 11 பேருக்கு பரிசோதனை
விழுப்புரம் அரசு டாக்டருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் அவருடைய குடும்பத்தினர் உள்பட 11 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 5 கி.மீ. தூரத்திற்கு கிருஷ்ணகிரி நகரை சுற்றிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் குழந்தைகள் நல மருத்துவராக ஒரு பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் விழுப்புரத்தில் அரசு டாக்டராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெண் டாக்டருடன் தந்தையும் வசித்து வருகிறார். விழுப்புரத்தில் பணிபுரியும் டாக்டர் கடந்த வாரம் விடுமுறையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துவிட்டு நேற்று முன்தினம் விழுப்புரம் சென்றார்.
விடுமுறை முடிந்து பணிக்கு சென்ற அவரை, சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்தபோது, முதல் கட்டமாக அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், அதிகாரபூர்வமான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள அவரது டாக்டர் மனைவி, தந்தை ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 9 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களையும் தனிமையில் வைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
விடுமுறையில் கிருஷ்ணகிரி வந்த விழுப்புரம் டாக்டர், நகரில் உள்ள மளிகை, காய்கறி கடை மற்றும் பேக்கரி கடைகளுக்கும் சென்று வந்துள்ளார். அதனால் அந்த இடங்கள் குறித்தும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அவரது டாக்டர் மனைவி யாருக்கெல்லாம் சிகிச்சை அளித்தார் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் வசிக்கும் பகுதியில் 5 கி.மீ தொலைவிற்கு கிருஷ்ணகிரி நகரை சுற்றிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய உறவினர்கள் கிருஷ்ணகிரியில் வசித்து வருகின்றனர். அவர் கடந்த வாரம் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றதையடுத்து, அவரது உறவினர்களுக்கு நேற்று ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் வந்து சென்ற வீட்டில் உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், அப்பகுதியை சுற்றி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, அப்பகுதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மாதிரி பரிசோதனை முடிவு வந்த பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.