திருப்பூரில் 3 நாட்கள் ஊரடங்கு முடிந்தது: காய்கறி சந்தைகளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை - வியாபாரிகள் அதிர்ச்சி
திருப்பூர் மாநகராட்சியில் 3 நாள் முழுஊரடங்கு முடிந்ததால் காய்கறி வாங்க எதிர்பார்த்த கூட்டம் நேற்று இல்லை. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.;
திருப்பூர்,
கொரோனா வைரஸ் உலக மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. வருகிற 3-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 112 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 3-வது இடம் பெற்று உள்ளதால் கொரோனா மேலும் பரவாமல் இருக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 3 நாட்கள் திருப்பூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து 3 நாட்கள் திருப்பூரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்களும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் 3 நாட்கள் முழு ஊரடங்கு முடிந்தது. ஊரடங்கு வருகிற 3-ந்தேதி வரை அமலில் இருப்பதால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை கடைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 3 நாட்கள் முழு ஊரடங்கு முடிந்து நேற்று நகரில் கூட்டம் அலைமோதும் என வியாபாரிகள் நினைத்து இருந்தனர்.
ஆனால் திருப்பூர் காய்கறி சந்தைகளில் வியாபாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் நேற்று வரவில்லை. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக உழவர் சந்தை, திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி சந்தை, திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை கல்லூரியில் செயல்படும் தற்காலிக சந்தை, சாலையோர சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.
காய்கறி வியாபாரமும் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது:-
“3 நாள் முழு ஊரடங்கு முடிந்து நேற்று வழக்கம் போல் வியாபாரத்துக்கு வந்தோம். பொதுமக்கள் அதிகம் பேர் காய்கறிகளை வாங்க வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். 3 நாட்களும் வேன்களில் வீதி, வீதியாக சென்று காய்கறிகள் விற்பனை நடைபெற்றதால் எதிர்பார்த்த விற்பனை நடை பெறவில்லை” என்றார்.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று 15 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. வழக்கமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வியாபாரம் நடைபெற்று வந்த நிலையில் மழை காரணமாக நேற்று காலை 6.30 மணி வரை வியாபாரம் நடைபெற்றது. காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு நேற்று 45 டன் காய்கறிகளை 350 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு நேற்று 18 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய வியாபாரம் காலை 9 மணி வரை நடைபெற்றது. திருப்பூர் மீன்மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து நேற்று 15 டன் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தது. காலை 4 மணிக்கு தொடங்கிய மீன் விற்பனை காலை 10 மணிக்கு முடிவடைந்தது. கட்லா கிலோ ரூ.180-க்கும், ரோகு ரூ.160-க்கும், நெய்மீன் ரூ.110-க்கும், மிருகால் ரூ.150-க்கும், அணை பாறை ரூ.180-க்கும் விற்பனை ஆனது. 15 டன் மீன்களும் நேற்று விற்று தீர்ந்து விட்டது.
அதே நேரத்தில் நகரில் பிரதான சாலைகளில் நேற்று வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோடு, கே.எஸ்.ஜி. சாலை, குமரன் சாலை, புஷ்பா ரவுண்டானா, பி.என்.சாலை உள்ளிட்ட சாலைகளில் அதிக அளவு வாகனங்கள் சென்றன. முககவசம் அணிந்து பொதுமக்கள் வாகனங்களில் சென்றனர்.