பெட்ரோல் செலவு, கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை: மார்க்கெட்டிற்கு காய்கறிகளை விற்க வரும் விவசாயிகளின் பரிதாப நிலை

மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் பெட்ரோல் செலவு, கூலிக்குகூட கட்டுப்படியாகாமல் தவித்து வருகின்றனர்.

Update: 2020-04-29 05:03 GMT
புதுக்கோட்டை, 

மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் பெட்ரோல் செலவு, கூலிக்குகூட கட்டுப்படியாகாமல் தவித்து வருகின்றனர்.

விளை பொருட்கள்

ஊரடங்கினால் விவசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். தங்களது விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தவித்து வருகின்றனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக மார்க்கெட்டிற்கு காய்கறிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் பலர் வாகனங்களில் கொண்டு வருகின்றனர். காய்கறிகளை கமிஷன் மண்டி ஏலக்கடைக்காரர்களிடம் விவசாயிகள் விற்று பணம் பெறுகின்றனர்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், முருங்கைக்காய், பாகற்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளது. இதில் சிறு விவசாயிகள் இரு சக்கர வாகனங்களில் காய்கறிகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து விற்கின்றனர்.

காய்கறி விவசாயம்

தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகளை ஏலக்கடையில் விற்க வந்த கறம்பக்குடி பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் கூறியதாவது:- ஊரடங்கினால் காய்கறிகளின் விலைகள் எல்லாம் வீழ்ச்சியடைந்து விட்டன. உரிய விலை எதுவும் கிடைப்பதில்லை. நான் 4 ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் செய்து வருகிறேன்.

பெட்ரோல் செலவு

காய்கறிகளை விற்பதில் ரூ.500 வரை கிடைக்கும். இந்த தொகையை வைத்து வீட்டிற்கு தேவையான மற்ற காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி செல்வேன். மேலும் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவேன். காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாததால் பெட்ரோல் செலவு, கூலிக்குகூட கட்டுப்படியாகவில்லை. இருப்பினும் செலவுக்கு பணம் வேணும் என்பதால் காய்கறிகளை கொண்டு வந்து விற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்