சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படாததால் வருவாய் இன்றி தவிக்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள்

ஊரடங்கால் கடந்த ஒருமாதமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. அதனால் அதனை நம்பி வாழ்ந்த தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Update: 2020-04-29 05:02 GMT
வேலூர்,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பால், மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மட்டும் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அதுவும் குறிப்பிட்ட சிலமணி நேரங்களே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, சுவீட் கடைகள், சலூன்கள், பெண்கள் அழகு நிலையம், செல்போன் கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

புதர்கள் போன்று தாடியுடன்...

ஊரடங்கால் கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள், சலூன் கடை, அழகு நிலையத்தில் பணிபுரிவோர் உள்ளிட்டோர் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து உள்ளனர். சலூன் கடைகள், அழகுநிலையங்கள் கடந்த ஒரு மாதமாக அடைக்கப்பட்டுள்ளன.

சேவிங் செய்வதற்காகவும், முடி வெட்டுவதற்காகவும், தாடி மீசை ஒதுக்குவதற்காகவும், முடிச்சாயம் (டை) பூசுவதற்காகவும் சலூன் கடைகளை நம்பி இருந்தவர்கள் பெரும் சிரமத்துடன் காணப்படுகின்றனர். கட்டிங் செய்ய முடியாததால் முடி நீளமாக வளர்ந்து தலை பரட்டையாக காட்சி அளிக்கிறது. சேவிங் செய்ய முடியாதவர்கள் புதர்கள் போன்று தாடியுடன் திரிகின்றனர். சில வீடுகளில் பெண்கள் குழந்தைகளுக்கு தங்களுக்கு தெரிந்த முறையில் முடிவெட்டி நிலைமையை சமாளித்து வருகிறார்கள்.

வருவாய் இன்றி தவிக்கும் தொழிலாளர்கள்

ஊரடங்கு காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சலூன் கடைகள், அழகு நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் நலச்சங்க வேலூர் மாவட்ட தலைவர் (மேற்கு) கணபதி கூறியதாவது:-

ஊரடங்கால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. அவற்றில் சலூன் கடையும் ஒன்று. இதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அன்றாட தேவைகளை சமாளிக்க சில சமயங்களில் மற்றவர்களின் உதவியை நாடும் நிலை காணப்படுகிறது. வேலூர் மேற்கு மாவட்ட சங்கத்தில் 1,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களை தவிர 500-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யாமல் கடை நடத்தி வருகிறார்கள். வேலூர் கிழக்கு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சலூன் கடைகள் திறக்கப்படாததால் அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகிறார்கள். அதேபோன்று அழகுநிலையங்களில் பணிபுரியும் பெண்களும் பாதிப்படைந்துள்ளனர். முடிதிருத்துவோர் நலசங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவி எதுவும் வழங்கவில்லை. கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது போன்று அரசு எங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சலூன் கடைகளை வாரத்தில் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். முகக்கவசம், கையுறை அணிந்து நாங்கள் பணிபுரிய தயாராக உள்ளோம். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்