திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உள்பட 5 பேர் குணமடைந்தனர்
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உள்பட 5 பேர் குணமடைந்ததால் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.;
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உள்பட 5 பேர் குணமடைந்ததால் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை அறிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணமானதும் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
திருச்சி அரசு மருத்துவமனையில், மொத்தம் 51 பேர் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஏற்கனவே 42 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கொரோனா வார்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் குணமடைந்து நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனை டீன் வனிதா, தலைமை மருத்துவ அதிகாரி ஏகநாதன் மற்றும் டாக்டர்கள் பழங்கள் உள்ளிட்டவைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதற்காக கடுமையாக உழைத்த மருத்துவ ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு பாராட்டு தெரிவித்தார்.
14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
6-வது நாளாக வைரஸ் பாதிப்பு இல்லை
திருச்சி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அறிக்கை வரவில்லை. எல்லாமே நெகட்டிவ் ஆகவே உள்ளது. இதனால், திருச்சியை விட்டு கொரோனா படிப்படியாக விலகி வருகிறது என்று அரசு டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து ஒரு மாதம் வரை இருக்கலாம் என்றும், எனவே, இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக முக கவசங்கள் அணிவதையும், அடிக்கடி கிருமிநாசினி மற்றும் சோப்பு கொண்டு கைகளை கழுவுவதையும் பொதுமக்கள் தவிர்க்க கூடாது என்றும், பாதுகாப்பை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.